Thursday 31 March, 2011

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?


 திராவிட முன்னேற்ற  கழகத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக சோ ராமசாமி போன்ற அறிவு ஜீவிகளும் ஆனந்த விகடன் போன்ற அவா ஊடகங்களும் சீமான் போன்ற ஈழப்போராளிகளும் முன்  வைக்கும் காரணங்கள் இவைதான்.

ஸ்பெக்ட் ரம் முறை கேடுகள்
கலைஞரின் குடும்பம்
விலைவாசி உயர்வு
ஈழப் பிரச்சனை

ஸ்பெக்ட்ரம் முறை கேடுகள் தொடர்பாக ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உச்ச நீதி மன்றம், நாடாளுமன்ற கூட்டு குழு போன்ற உயர் அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோருக்கு கூட சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். தவறு செய்திருந்தால் நிச்சயமாக தண்டிக்கப்படப்போகிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார்.

ராசா கைது செயப்பட்டதாலேயே திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?ஜெயலலிதா மீது சுமத்தப்படாத குற்றங்களா? சிறைக்கு அனுப்பப்படவில்லையா?அத்தனையயும் சரியான நிருபணம் இல்லை யென்பதால் கடந்து வந்துவிட்டார்ராசாவும் அது மாதிரி வரமாட்டாரா? ஜெயலலிதா மீது இன்னமும் கூட ஒரு வழக்கு பாக்கி இருக்கிறது. அவருக்கு மட்டும் வாக்களிக்கலாமா?ஸ்டெர்லைட் கம்பெனியிடம் ரூபாய் ஆயிரம் கோடி பெற்று கொண்டுதான் தான் ஓரம் கட்டப் பட்டுவிட்டதாக வைகோ யாரை குற்றம் சாட்டுகிறார்? அவர்களுக்கு மட்டும் வாக்களிக்கலாமா?

கலைஞரின் குடும்ப படத்தை வெளியிட்டு, "ஆக்டோபஸ்" என்று                     அநாகரீகமாக வருணிக்கிறது ஆனந்த விகடன்.ஏறத்தாழ  90 வயதை நெருங்கும் ஒருவருக்கு உறவுகள் அதிகமாக இருக்காதா? இதில் என்ன அதிசயம்? மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், இருப்பது இயல்புதானே?தந்தையின் வழியில் அவரது வாரிசுகளும் வருவது இந்த நாட்டில் இதுவரை இல்லாத ஒன்றா?டாக்டர்கள், வழக்கறி ஞர்கள், நடிகர்கள்,பாடகர்கள் என்று அனைத்து துறையிலும் வாரிசுகள் வரத்தானே செய்கிறார்கள்?கலைஞரின் குடும்ப வாரிசுகள் மட்டும் அரசியலுக்கு வரக் கூடாதா? சசிகலா குடும்பம் மட்டும் சிறிய குடும்பமா? அதனை படம் பிடித்து போடுகின்ற தைரியம் ஆனந்த விகடனுக்கு உண்டா? கலைஞரின் கொள்ளு பேரன்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அமைச்சர்கள் என்று கிண்டலடிக்கிறது ஆனந்த விகடன். . அம்மாவின் ஹெலிகாப்டரை வானத்திலே பார்த்தவுடன் கீழே விழுந்து வண்ங்கிய அமைச்சர்களை பற்றி நாடே கைகொட்டி சிரித்ததே, அது ஆனந்த விகடனுக்கு தெரியாதா?கட்சியின் எல்லப் பொறுப்புகளும் கலைஞரின் குடும்பத்திற்கே கொடுக்கப்படுகிறதாம். ஆனந்த விகடனுக்கு இப்படி ஒரு கவலை. ஏன் வேறு யாருக்காவது கொடுத்தால் இவர்கள் எல்லொரும் திமுகவிற்கு வந்துவிடுவார்களா? தனது கட்சியில் யாருக்கு பொறுப்பு அளிக்கப்படவேண்டும் என்பது அந்த கட்சியின் தலைவரின் உரிமை. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அந்த கட்சியின்  தொண்டர்களின் உரிமை. இடையில் இவர்கள் ஏன் கவலைப் படுகிறர்கள்?அம்மா கட்சியில் மட்டும் சீனியாரிடி பார்த்தா பதவி வழங்கப்படுகிறது?சசிகலா கைகாட்டுபவர்களுக்குதான் பதவிகள் என்று  பேசப்படுகிறதே? ஆனந்தவிகடனுக்கு தெரியாதா என்ன?

விலைவாசி பிரச்சனை ஏதோ தமிழகத்தின் பிரச்சனை என்பதுபோல் பேசப்படுகிறதே. விலைவாசி உயர்வு  இந்தியாவின் ஒட்டு மொத்த  பிரச்சனை இல்லையா? மேற்கு வங்கத்தில் மட்டும் விலை வாசி மிக குறைந்து உள்ளதா?ஏதோ அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டால், அரை அணாவிற்கு இட்லியும்  ஐம்பது காசுக்கு தோசையும் கிடைக்கும் என்பது போல் பிரச்சாரம் செய்யப்படுகிறதே, இது நியாயமா?இது வடிகட்டிய முட்டாள்தனம் என்று மக்கள் அறிய மாட்டார்களா?

ஈழப் பிரச்சனைக்காக ஜெயலலிதாவை ஆதரிப்பவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.விடுதலை புலிகளுக்கு எதிரானவர் என்று தன்னை பிரகடன படுத்தி அதனால் தன் உயிருக்கு கடுமையான ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்து பூனை படை பாதுகாவல் பெற்றவர் அவர். ஏதோ அம்மா ஆட்சிக்கு வந்த்து விட்டால் கலைஞரை கைது செய்ததது போல ராஜபக்சேயயும் கைது  செய்து சிறையில் அடைத்து தமிழ் ஈழம் மலர செய்வார் என்று சீமான் சொல்வார், நாமெல்லாம் நம்பவேண்டும்!
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? இது ஆருடம் அல்ல. அனுபவம்
1) கலைஞர் கஜானாவை காலியாக்கிவிட்டர். தமிழகம் நிதி நெருக்கடியில் இருக்கிறது, அதனால் அவரால் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள் நிறுத்தப் படுகிறது என்று அறிவிக்கப்படும்
2)அரசு ஊழியருக்கான அகவிலைப்படி மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தப்படும்.
3)பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்.
4) நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பேருந்து கழங்கள் தனியார் மயமாக்கப்படும்
5)திரைபடத்துறை கேளிக்கை வரி மீண்டும் அமுல் படுத்தப்படும்
6)நிதி நெருக்கடியை காரணம் காட்டி சாலை பாலங்கள் பணிகள் நிறுத்தப்படும்.
7) தேர்தல் நேரத்தில் தனக்கு குடைச்சல் கொடுத்த வைகோ மற்றும் விஜயகாந்த் போன்றவர்கள் ஏதோ காரணம் சொல்லி கைது செய்யப்படுவார்கள்.
8) ஸ்டாலின், அழகிரி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள்.
9)கொட நாட்டில் தனக்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் தண்டிக்கப்படுவார்கள்.
10) இறுதியாக ஒரு அறிக்கையில், தான் பதவி ஏற்ற போது தமிழகம் 5000 ஆம் கோடி ரூபாய் நிதி பற்றாக் குறையில் இருந்தது. ஆனால் இப்பொழுது 15000 கோடி ரூபாய் உபரியாக உள்ளது என்பார்.

இதைத் தவிர மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.இப்படி பழி வாங்கும் நோக்குடனும், உணர்ச்சி வயபடக் கூடியவருமான  சர்வாதிகாரிஒருவருக்கும், பொது இடத்தில் கூட மரியாதையை கடை பிடிக்காமல் தன் சொந்த வேட்பாளரையே அடிக்கும் அவரது கூட்டணித் தலைவருக்குமா நாம் வாக்களிக்க வேண்டும்?
எனவே  ஜனநாயகத்தை காப்பாற்ற கலைஞருக்கே வாக்களிப்போம்!~









Friday 25 March, 2011

இவரா உறுதியானத் தலைவர்?

                      
இலவசத்தை அள்ளி தந்து இந்த நாட்டை பிச்சைக்கார நாடாக கலைஞர் மாற்றிவிட்டார் என்று எக்காளமிட்ட கூட்டம் இன்று ஆகா அம்மா அருமையான தேர்தல் அறிக்கை தந்துவிட்டதாக ஆரவாரமிடுகிற்து. கலைஞரின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டதற்கே இப்படி ஒரு ஆர்ப்பாட்டமா? அறிவு ஜீவியான அம்மா ஒரு தேர்தல் அறிக்கையினை கூட நகல் எடுத்து வெளியிடுகின்ற நிலைமையினை பார்த்து நாடே சிரிக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு அவர் தந்த மரியாதையை நடிகர் கார்த்திக்கும் வைகோ அவர்களும் இதயத்திலிருந்து இரத்தம் வடிகின்ற அளவிற்கு மேடைதொறும் புலம்பிகொண்டிருக்கிறார்கள். அம்மாவிற்கு ஆணவம் குறையவில்லை என்று அறிவிக்கிறார்கள். அரசு ஊழியர்களை பணி  நீக்கம்  செய்த அற்புதமான நிர்வாகி என்று பாராட்டிய கூட்டம் ,அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் சலுகைகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை கொண்டு தமிழ் நாட்டை பணக்கார நாடாக மாற்றிவிடுவார் என்றெல்லாம் கொக்கரித்தனர். அதைதான் அவர் தேர்தல் அறிக்கையிலும் எதிர்பார்த்தனர். ஆனால் அம்மையார் அவர்களோ அரசு ஊழியர்களின் சலுகைகள் அப்படியே நீடிக்கும் என்று உறுதி தருகிறார். தேர்தலே இல்லாத ஒரு நாட்டின் சர்வாதிகாரி மாதிரி, தன் மனதிற்கு தோனறியவற்றையெல்லாம்   செய்த செயலலிதா, தேர்தல் அறிவித்தவுடன் நான்கு ஆண்டுகளாய் அவர்  போட்ட சட்டங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியதை தமிழ் நாடு நன்கு அறியும்.இவர்தான் உறுதி மிக்க தலைவரா? கலைஞர் குடும்ப ஆட்சியை அகற்றக் கோரும் இவர் , சசிகலா குடும்ப ஆட்சியை கொண்டு வர விரும்புகிறரா? ஸ்பெக் ட்ரம் ஊழல் பற்றி பேசும் இவர் , ஸ்டெர்ல்ய்ட் கம்பனியிடம், எறத்தாழ 1000 கோடி பெற்று கொண்டுதான் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வைகோ கூறும் குற்றச்சாட்டு , யாரைப் பற்றியது என்பதை விளக்குவாரா? சோ ராமசாமி போன்றவர்கள் சொல்வதுபோல் இவர் ஒரு உறுதியான ,நிர்வாகத் திறமை வாய்ந்த அரசியல்வாதியாக இருந்திருப்பாரேயானால் இவருடைய தேர்தல் அறிக்கை என்ன மாதிரி இருந்திருக்கவேண்டும்?
1)நான் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நாட்டை குட்டிச்சுவராக்கும் இலவசத் திட்டங்கள் அத்தனையையும்  நிறுத்திவிடுவேன்.               
2) அரசின் வருவாயில் 90 சதவிகிதம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே போய்விடுவதால்அரசு ஊழியர்களுக்கு   கொடுக்கப்படும் அத்தனை சலுகைகளையும் உடன்  நிறுத்துவேன்.  
3) ஏழைகளை சுரண்டும் டாஸ்மாக் கடைகளை உடன் மூடுவேன்.
4)பேருந்துகளை தனியார் மயமாக்கி அரசுக்கு ஏற்பட்டுவரும்
  நஷ்டத்தை தடுப்பேன்.
5) மதமாற்றங்களை அனுமதிக்க மாட்டேன்.
6) விடுதலை புலிகளுக்கு ஆதரவாக உள்ளவர்களை பாதுகாப்புசட்டத்தின் கீழ் கைது செய்வேன்.
மேற் சொன்ன விஷயங்களுக்ககாத்தான் சோ ராமசாமி மற்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் போன்றவர்கள் இவரை வானாளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரோ கலைஞர் அறிக்கையினை நகல் எடுத்து இலவசங்களை வாரி இரைக்கிறார்.இவரா உறுதியானத்  தலைவர்? இவரா பொருளாதார வல்லுனர்?
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் வெறும் உண்ர்ச்சி வயப்பட்டு, ஆத்திரத்துடனும் கோபத்துடனும் செயல்படும் இவரால் இந்த நாட்டிற்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?







அண்ணாவின் அறைகூவல்

                      

ஒரு பொங்கலன்று பேரறிஞர் அண்ணா விடுத்த அறைகூவல் இன்றும் பொருந்துமோ?
                                   -----
ஓர் திங்கள்கூட அல்ல; இரு கிழமைகளே இடையில்! இருளுக்கும் ஒளிக்கும் இடையில்! இல்லாமைக்கும் "எல்லோர்க்கும் எல்லாம்' எனும் நிலைக்கும் இடையில்; அன்பு வழி மறந்து அறம் பழித்து நடாத்தப்படும் அரசியலுக்கும் அன்பரசுக்கும் இடையில்!
இந்த இடையிலே உள்ள நாட்களில், மக்கள் தமது கடமை உணர்ந்து, ஆற்றல் மறவாமல், நெறி பிறழாமல் பணியாற்றிடின், புத்தாட்சி அமைத்திட இயலும், நாட்டிலே புத்தொளி பரவிடச் செய்திட முடியும்.
முடியும், முயன்றால்! முயன்றோர் வெற்றி கண்டுள்ளனர்! முயன்று பல முடித்த மரபினரே நாம்! அதனை மறவாது, எழுச்சியுடன் பணிபுரிந்திடின், வெற்றி நமதே! ஐயமில்லை! உதயசூரியன் எழுவான்! ஐயமில்லை! எழு ஞாயிறு கண்டிடின், ஏது இருள்? எங்கும் ஒளிமயம்! அகத்திலும் புறத்திலும் நாடெங்கும்! வீடெல்லாம்!
அந்த எழிலையும் ஏற்றத்தையும் பெற்றாக வேண்டும் என்ற உறுதியைச் சமைத்தெடுத்து, தானும் உண்டு, மனையுளார் அனைவர்க்கும் தந்து மகிழ்ந்திட வேண்டுகிறேன்; மாண்பு பெற வேண்டுகிறேன்.
அகமும் புறமும்கொண்டோர் நாம்; இன்று அறியாமையின் பிடியில் சிக்கியுள்ளோம்.
கரும்பு விளையும் நாடு இது; மக்கள் கசப்பு உண்டு உழல்வது காண்கின்றோம்.
செந்நெல் விளைந்திடும் வளமிகு பூமி இது; இன்று கட்டாயப் பட்டினி, அரச கட்டளையாகிடக் காண்கின்றோம்.
எல்லோரும் ஓர் நிறை என்ற கவிதை பெற்றோம்; இன்றோ இல்லாதார் தொகை வளர்ந்திடக் காண்கின்றோம்.
உலை கொதிக்கிறது, பானை இசைபாடுகிறது, கொண்டு வந்து போடு! கொண்டுவந்து போடு! என்று; அரிசி கொட்டிடின் சோறு காண்போம்; மணலைக் கொட்டிடின்?
செங்கரும்புத் துண்டொன்றைத் தூக்கிச் சென்று சிவந்த அதரம் இரத்தச் சிகப்பாகு மட்டும் கடித்துத் தின்கின்றான், கண்ணின்மணி! காண்கின்றோம், களித்திடுகின்றோம். கரும்புத் துண்டாக இன்றி, மூங்கில் துண்டாக இருந்திடின்!
முக்கனி கிடைத்திடாமல், எட்டிக்கனியைக் கொட்டி இஃது வேண்டுமோ என்று கேட்டிடின், என்ன எண்ணிக்கொள்வோம்! இன்று "பசுமையை' வெகுபாடுபட்டு இல்லங்கள் தேடிப் பெறுகின்றன. பசுமை, தன்னாலே கிடைத்திடவில்லை; தாராளமாகவும் காணப்படவில்லை.
எங்கும், என்றும் பசுமை கொலுவிருக்கத்தக்க நிலை பெற்றிடலாம் இன்பத் திரு இடத்தில்; அதற்கானதோர் நல்லரசு அமைத்திடின்.
இன்று, ஏற்படுத்திக்கொண்டுள்ள விழாக்கோலம் இயற்கையானதாகிட, இன்று வருவித்துக்கொள்ளும் மகிழ்ச்சி உயிருள்ளதாக, இன்று மனையுள்ளார் கொண்டிடும் பொலிவு என்றும் நிலைத்திருக்க யாது செயல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றிட வேண்டும்.
தமிழன் எண்ணிப் பார்த்திடின், தக்க வழியினைக் கண்டறியும் திறனுடையான்.
தமிழன், செயலார்வம் கொண்டிடின் எண்ணியதைச் செய்து முடிக்கவல்லான்.
தமிழன் கத்தும் கடல் அடக்கிக் கலம்விட்டான். கடக்கொணாதது என்று மற்றையோர் எண்ணி மலைத்திருந்த நாட்களிலேயே!
கங்கைகொண்டான், கடாரம் வென்றான், இமயம் சென்றான், கொடி பொறித்தான்; ஏற்றம் எல்லாம் கண்டான்.
வரலாறு மறவாமல் இருந்திடின், இன்றும் எண்ணியதை முடித்திட இயலும்.
கழகம், அந்த வரலாற்றுச் சிறப்பினை நித்தநித்தம் எடுத்துக் கூறி வருகிறது.
நல்லாட்சி அமைத்திடுவீர் என்று வேண்டியபடி இருந்து வருகிறது.
இன்று பொங்கற் புதுநாள்! மகிழ்ச்சி பெற்றிடும் நன்னாள். இந்நாளில் என் வாழ்த்துக்களை வழங்குகிறேன்; ஒன்று கேட்கின்றேன்; நல்லரசு கண்டிடும் நற்பணிக்கான உறுதி பெற்றிடுவீர், மற்றையோர்க்கும் அளித்திடுவீர்!
இன்று விழா மட்டுமல்ல; வீரம் விளைவிக்க உறுதி கொண்டிடும் நாள்!
நாடு விழாக்கோலம் கொண்டிடச் செய்வோம் என்ற உறுதி கொண்டிடும் நாள்.
விழா தரும் மகிழ்ச்சி அந்த உறுதியினை வளர்த்திடட்டும்! ஆற்றலை வளர்க்கட்டும் வெற்றி நோக்கி நடைபோடச் செய்யட்டும்!
கல்லும் முள்ளும் மண்டிக் கிடந்த இடம், மலர்த் தோட்டமானதும், கனிதரு நிறை சோலையானதும், கதையல்ல! விழா காட்டிடும் உண்மை!
ஒரு நல்லாட்சி கண்டிடும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதனை, உழைப்பின் மூலம் நாட்டின் புதிய காலத்தையே மாற்றிட வல்லோர் நமது மக்கள் என்பதனை எடுத்துக் காட்டிடும் இந்நாளன்று; நல்லாட்சி அமைத்திட உறுதி கொண்டேன்; செய்து முடிப்பேன்; வெற்றி காண்பேன்! - என்ற முழக்கம் எழட்டும்; புறப்படு,தம்பி! புறப்படு!
புனிதப் போர் நடாத்திட! வெற்றி பெற்றிட! புறப்படு! ஒரு முறை - மற்றோர் முறை - விழாக்கோலம் கொண்டுள்ள மனையினைக் கண்டு களித்திடு; இல்லத்துள்ளாரின் இன்முகம் கண்டு மகிழ்ந்திடு!
புதியதோர் "தெம்பு' பெறுகின்றாய் அன்றோ! அந்தத் "தெம்பு' தரும் நடையுடன் புறப்படு. தமிழன்னை அழைக்கின்றாள், எல்லா வளமும் நான் தந்தேன், தக்க முறையில் பயன்படுத்தி என் மக்களை வாழவைக்கும் நல்லரசு அமைத்திட வா! மகனே வா என்று.
ஆமாம், தம்பி! அன்னை அழைக்கின்றாள் புறப்படு! - என்று நானும் அழைக்கின்றேன்! வெற்றி விழா காணலாம், வீரநடை போடலாம், புறப்படு!
அண்ணன்,





8-1-67