ஒரு பொங்கலன்று பேரறிஞர் அண்ணா விடுத்த அறைகூவல் இன்றும் பொருந்துமோ?
-----
ஓர் திங்கள்கூட அல்ல; இரு கிழமைகளே இடையில்! இருளுக்கும் ஒளிக்கும் இடையில்! இல்லாமைக்கும் "எல்லோர்க்கும் எல்லாம்' எனும் நிலைக்கும் இடையில்; அன்பு வழி மறந்து அறம் பழித்து நடாத்தப்படும் அரசியலுக்கும் அன்பரசுக்கும் இடையில்!
இந்த இடையிலே உள்ள நாட்களில், மக்கள் தமது கடமை உணர்ந்து, ஆற்றல் மறவாமல், நெறி பிறழாமல் பணியாற்றிடின், புத்தாட்சி அமைத்திட இயலும், நாட்டிலே புத்தொளி பரவிடச் செய்திட முடியும்.
முடியும், முயன்றால்! முயன்றோர் வெற்றி கண்டுள்ளனர்! முயன்று பல முடித்த மரபினரே நாம்! அதனை மறவாது, எழுச்சியுடன் பணிபுரிந்திடின், வெற்றி நமதே! ஐயமில்லை! உதயசூரியன் எழுவான்! ஐயமில்லை! எழு ஞாயிறு கண்டிடின், ஏது இருள்? எங்கும் ஒளிமயம்! அகத்திலும் புறத்திலும் நாடெங்கும்! வீடெல்லாம்!
அந்த எழிலையும் ஏற்றத்தையும் பெற்றாக வேண்டும் என்ற உறுதியைச் சமைத்தெடுத்து, தானும் உண்டு, மனையுளார் அனைவர்க்கும் தந்து மகிழ்ந்திட வேண்டுகிறேன்; மாண்பு பெற வேண்டுகிறேன்.
அகமும் புறமும்கொண்டோர் நாம்; இன்று அறியாமையின் பிடியில் சிக்கியுள்ளோம்.
கரும்பு விளையும் நாடு இது; மக்கள் கசப்பு உண்டு உழல்வது காண்கின்றோம்.
செந்நெல் விளைந்திடும் வளமிகு பூமி இது; இன்று கட்டாயப் பட்டினி, அரச கட்டளையாகிடக் காண்கின்றோம்.
எல்லோரும் ஓர் நிறை என்ற கவிதை பெற்றோம்; இன்றோ இல்லாதார் தொகை வளர்ந்திடக் காண்கின்றோம்.
உலை கொதிக்கிறது, பானை இசைபாடுகிறது, கொண்டு வந்து போடு! கொண்டுவந்து போடு! என்று; அரிசி கொட்டிடின் சோறு காண்போம்; மணலைக் கொட்டிடின்?
செங்கரும்புத் துண்டொன்றைத் தூக்கிச் சென்று சிவந்த அதரம் இரத்தச் சிகப்பாகு மட்டும் கடித்துத் தின்கின்றான், கண்ணின்மணி! காண்கின்றோம், களித்திடுகின்றோம். கரும்புத் துண்டாக இன்றி, மூங்கில் துண்டாக இருந்திடின்!
முக்கனி கிடைத்திடாமல், எட்டிக்கனியைக் கொட்டி இஃது வேண்டுமோ என்று கேட்டிடின், என்ன எண்ணிக்கொள்வோம்! இன்று "பசுமையை' வெகுபாடுபட்டு இல்லங்கள் தேடிப் பெறுகின்றன. பசுமை, தன்னாலே கிடைத்திடவில்லை; தாராளமாகவும் காணப்படவில்லை.
எங்கும், என்றும் பசுமை கொலுவிருக்கத்தக்க நிலை பெற்றிடலாம் இன்பத் திரு இடத்தில்; அதற்கானதோர் நல்லரசு அமைத்திடின்.
இன்று, ஏற்படுத்திக்கொண்டுள்ள விழாக்கோலம் இயற்கையானதாகிட, இன்று வருவித்துக்கொள்ளும் மகிழ்ச்சி உயிருள்ளதாக, இன்று மனையுள்ளார் கொண்டிடும் பொலிவு என்றும் நிலைத்திருக்க யாது செயல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றிட வேண்டும்.
தமிழன் எண்ணிப் பார்த்திடின், தக்க வழியினைக் கண்டறியும் திறனுடையான்.
தமிழன், செயலார்வம் கொண்டிடின் எண்ணியதைச் செய்து முடிக்கவல்லான்.
தமிழன் கத்தும் கடல் அடக்கிக் கலம்விட்டான். கடக்கொணாதது என்று மற்றையோர் எண்ணி மலைத்திருந்த நாட்களிலேயே!
கங்கைகொண்டான், கடாரம் வென்றான், இமயம் சென்றான், கொடி பொறித்தான்; ஏற்றம் எல்லாம் கண்டான்.
வரலாறு மறவாமல் இருந்திடின், இன்றும் எண்ணியதை முடித்திட இயலும்.
கழகம், அந்த வரலாற்றுச் சிறப்பினை நித்தநித்தம் எடுத்துக் கூறி வருகிறது.
நல்லாட்சி அமைத்திடுவீர் என்று வேண்டியபடி இருந்து வருகிறது.
இன்று பொங்கற் புதுநாள்! மகிழ்ச்சி பெற்றிடும் நன்னாள். இந்நாளில் என் வாழ்த்துக்களை வழங்குகிறேன்; ஒன்று கேட்கின்றேன்; நல்லரசு கண்டிடும் நற்பணிக்கான உறுதி பெற்றிடுவீர், மற்றையோர்க்கும் அளித்திடுவீர்!
இன்று விழா மட்டுமல்ல; வீரம் விளைவிக்க உறுதி கொண்டிடும் நாள்!
நாடு விழாக்கோலம் கொண்டிடச் செய்வோம் என்ற உறுதி கொண்டிடும் நாள்.
விழா தரும் மகிழ்ச்சி அந்த உறுதியினை வளர்த்திடட்டும்! ஆற்றலை வளர்க்கட்டும் வெற்றி நோக்கி நடைபோடச் செய்யட்டும்!
கல்லும் முள்ளும் மண்டிக் கிடந்த இடம், மலர்த் தோட்டமானதும், கனிதரு நிறை சோலையானதும், கதையல்ல! விழா காட்டிடும் உண்மை!
ஒரு நல்லாட்சி கண்டிடும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதனை, உழைப்பின் மூலம் நாட்டின் புதிய காலத்தையே மாற்றிட வல்லோர் நமது மக்கள் என்பதனை எடுத்துக் காட்டிடும் இந்நாளன்று; நல்லாட்சி அமைத்திட உறுதி கொண்டேன்; செய்து முடிப்பேன்; வெற்றி காண்பேன்! - என்ற முழக்கம் எழட்டும்; புறப்படு,தம்பி! புறப்படு!
புனிதப் போர் நடாத்திட! வெற்றி பெற்றிட! புறப்படு! ஒரு முறை - மற்றோர் முறை - விழாக்கோலம் கொண்டுள்ள மனையினைக் கண்டு களித்திடு; இல்லத்துள்ளாரின் இன்முகம் கண்டு மகிழ்ந்திடு!
புதியதோர் "தெம்பு' பெறுகின்றாய் அன்றோ! அந்தத் "தெம்பு' தரும் நடையுடன் புறப்படு. தமிழன்னை அழைக்கின்றாள், எல்லா வளமும் நான் தந்தேன், தக்க முறையில் பயன்படுத்தி என் மக்களை வாழவைக்கும் நல்லரசு அமைத்திட வா! மகனே வா என்று.
ஆமாம், தம்பி! அன்னை அழைக்கின்றாள் புறப்படு! - என்று நானும் அழைக்கின்றேன்! வெற்றி விழா காணலாம், வீரநடை போடலாம், புறப்படு!
அண்ணன்,

8-1-67
No comments:
Post a Comment